வீட்டில் பைரவர் பூஜை செய்யும் முறை மற்றும் பலன்கள்

Posted by

உலகமெலாம் காக்கும் உண்மையான உலகநாயகனாக இருப்பது சிவபெருமானே ஆவார். சிவனை நினைத்தாலே நமது பாவங்கள் எல்லாம் நீங்கும். பல்வேறு காலங்களில் உலகில் வசிக்கும் உயிர்களின் துன்பத்தை போக்க பல வடிவங்கள் சிவபெருமான் எடுத்திருக்கிறார். அதில் ஒன்று தான் காக்கும் கடவுளான பைரவர் வடிவம். உக்கிர தெய்வம் எனப்படும் பைரவரை கோயிலில் மட்டுமே வணங்குவது முறை. ஆனால் நமது வீட்டில் நிறைந்திருக்கும் தீமைகளை நீக்க வீட்டிலேயேபைரவர் பூஜைசெய்யும் முறை பற்றியும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வீட்டிலேயே பைரவர் பூஜை செய்வதற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலம் சிறந்த நேரமாக இருக்கிறது. இந்த சமயத்தில் பூஜையறையில் ஒரு சிறிய காலபைரவரின் படத்தையே அல்லது காலபைரவ யந்திரத்தையோ வைத்து, அப்படம் அல்லது யந்திரத்திற்கு மஞ்சள், சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து, மலர்களை சமர்ப்பித்து, நெய்தீபங்கள் ஏற்றி, கேசரி, சர்க்கரை பொங்கல் போன்ற ஏதேனும் ஒரு இனிப்பான உணவை நைவேத்தியமாக வைத்து பைரவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட்ட பின்பு, பைரவருக்கு ஆரத்தி எடுத்து பூஜையை முடிக்க வேண்டும்.

வீட்டிலேயே செய்யப்படும் இந்த பைரவர் பூஜையை குறைந்தது 8 சனி அல்லது ஞாயிறு ராகு காலங்களில் செய்வது சிறந்த பலன்களை தரும். எட்டாவது முறையாக செய்யப்படும் பைரவர் பூஜை அன்று, பூஜை முடிந்த பின்பு உங்கள் சக்திக்கு ஏற்ப யாசகர்களும், பொருளாதார வசதி குறைந்த மக்களுக்கும் புத்தாடைகள், அன்னதானம் சிறிது தட்சிணை வழங்கியதும் அருகிலுள்ள காலபைரவர் கோயிலுக்கு சென்று பூஜை செய்து வணங்க வேண்டும்.

மேலும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் கருப்பு நிற நாய்களுக்கு உணவு வழங்குவதால் உங்களை பீடித்திருக்கும் கிரக தோஷங்கள் மற்றும் பிறவி சாபங்கள் அனைத்தையும் நீக்கி அருள்புரிகிறார் பைரவ மூர்த்தி. முறைப்படி பைரவ பூஜை செய்து வருபவர்களுக்கு கிரக தோஷங்கள் நீங்கும். வீட்டிலிருக்கும் தரித்திர நிலை மாரி செல்வ சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகளில் நியாயம் உங்கள் பக்கம் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். விபத்துகள், அகால மரணம் போன்ற துர்வினைகள் நீங்கும். கொடிய நோய்கள் நீங்கும். துஷ்ட சக்திகள் மற்றும் செய்வினை பாதிப்புகள் ஒழியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.