காலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்

Posted by

காலையில் அவசர அவசரமாக எழுந்து, உண்டும் உண்ணாமலும் நான்கு வாய் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரக்கப்பறக்க அலுவலகம் சென்று, மதியச் சோறு மறந்து பாடுபட்டு, சோர்வாக வீட்டுக்குத் திரும்பி, படுக்கையில் விழுந்தால்… மீண்டும் காலையில் எழுந்து அதே மாரத்தான் ஓட்டம்! தினம் தினம் இப்படி டென்ஷனாகத்தான் ஓட வேண்டுமோ? இல்லை. ஒரு நாளின் காலைப் பொழுதுதான் அன்றைய தினம் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான ஆரம்பப்புள்ளி. அந்தக் காலைப் பொழுதை முறையாகத் திட்டமிட்டால், அன்றைய முழு நாளும் உற்சாகம் ததும்பும். அது எப்படி எனுப் பார்ப்போமா?

  • அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தின் அடிப்படை. அதிகாலை எழும் பழக்கத்தைக் கைக்கொள்ள, முதல் நாள் குறித்த நேரத்துக்கு உறங்கவேண்டியது அவசியம். குழந்தைகள் என்றால், 10 மணி நேரம் ஆழ்ந்த உறக்கமும், பெரியவர்கள் என்றால் 6-8 மணி நேர உறக்கமும் உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் அவசியம். வளரிளம் பருவத்தினருக்கு தூங்கும் நேரத்தில்தான் ஹார்மோன்கள் சீராகச் சுரக்கும். அதனால், குறிப் பிட்ட நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கம் மிக மிக அவசியம்.
  • எழுந்ததும் மொபைல், டி.வி., சோஷியல்மீடியா பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அது நம் நேரத்தைச் சுரண்டி, கண்களையும் மனதையும் கெடுக்கிறது. காலையிலேயே நம் மனஅழுத்தம் அதிகரித்துவிடுகிறது. இதனால், நாம் புத்துணர்ச்சியை இழந்துவிடுகிறோம்.
  • எழுந்ததும் தண்ணீர் பருகி, காலைக்கடன்களை முடித்துவிட்டு, 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது நடைப்பயிற்சி, சைக்கிளிங், யோகா என எதுவாகவும் இருக்கலாம்.
  • காலையில் வெளியில் நடக்கச் செல்வது அல்லது விளையாடச் செல்வது, உடலுக்கு மட்டும் அல்ல, மனதுக்கும் நல்லது. காலையில் கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜன் உடலுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.
  • அடுத்த ஒரு மணி நேரத்தில் நிதானமாகக் குளித்து, தவறாமல் காலை உணவை உண்ண வேண்டும். ஆவியில் வேகவைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் என ஏதாவது ஒன்றுடன், இடியாப்பம், இட்லி போன்ற வேகவைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
  • எட்டு மணிக்கு மேல், பரபரப்பான வாழ்க்கையில் சுழலப்போகிறோம். அலுவலகம் செல்வதற்கான பயண நேரத்தைத் திட்டமிட்டு, குறித்த நேரத்துக்குச் சற்று முன்னதாகவே சென்றுவிடுங்கள். இது பணியிடத்தில் டென்ஷன் இன்றி, உங்கள் ஒருநாளைத் திட்டமிட உதவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.