வேலை அழுத்தம் கொடுக்கிறதா…மீண்டும் ஊருக்குச் செல்லலாமா?

Posted by

நீங்கள் பெருநிறுவனங்களில் வேலை பார்ப்பவராக இருந்தால் அந்த குரலை நீங்கள் கேட்டிருக்கலாம் அல்லது நீங்களே அந்த குரலாகவும் இருந்திருக்கலாம். “சார்…. இவ்வளவு சம்பாரிசிச்சு என்ன பண்ணுறோம்… பாதியை டாக்டருக்கு அழுவுறோம்… வேலை தரும் மன அழுத்தமும் அதிகமா இருக்கு சார்… எது பின்னாடி ஓடுறோம்னே தெரியல… பெத்த பிள்ளையோட நேரம் செலவழிக்க கூட முடியல… சூழல் கேடுகளும் அதிகமா இருக்கு… சம்பாரிச்சது போதும்னு பேசாம ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன் சார்…” ஆம். 

இப்போது மாநகரங்களில் அதிகமாக ஒலிக்கும் குரல்… இதை படித்து கொண்டிருக்கும் உங்களின் குரலாகவும் இது இருக்கலாம். ஆனால், எத்தனை பேர் தம் நிலைகளுக்கு திரும்பி இருக்கிறோம். ஏதோ ஒரு தயக்கம், ஊருக்கு போனால் பிழைப்பிற்கு என்ன செய்வது, குழந்தைகளின் தரமான கல்விக்காக என்ன செய்வது போன்ற கேள்விகள் நம்மை தடுக்கிறது. நம் தயக்கத்தில் நியாயங்கள் இல்லாமலும் இல்லை. ஆனால், தயக்கத்தை உடைத்து தம் சொந்த ஊருக்கு திரும்பிய, வெற்றியாளர்களின் கதை இது. 
 
இந்த கட்டுரைக்காக நாம் திருநெல்வேலி மாவட்ட கடையத்தை சேர்ந்த ஃபெலிக்ஸைதொடர்பு கொண்ட போது, “வெற்றியாளர்கள் என்றெல்லாம் குறிப்பிடாதீர்கள் சார்… அந்த வார்த்தையே அருவருப்பா இருக்கு” என்று தன் உரையாடலை தொடங்கினார். 

இவர் புனேவில் உலக அளவில் முதன்மை நிறுவனமாக இருக்கும் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, ஒரு நன்நாளில் அனைத்தையும் துறந்து தம் சொந்த ஊருக்கு திரும்பியவர். 

“சக மனிதர்களை போட்டியாளர்களாக மட்டும் பார்க்க வைக்கும் இந்த நகர வாழ்வு பிடிக்காததுதான் நான் ஊருக்கு திரும்ப முக்கிய காரணம். அங்கு வெற்றி, முயற்சி என்ற வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் வேறு. உங்களுக்கென அங்கு தனிப்பட்ட வெற்றிகள் இல்லை. ஏன் உங்களுக்கென எந்த தனிப்பட்ட வாழ்வும் இல்லை. உங்கள் வாழ்வு நிறுவனத்துடன் பிணைந்தது. இதுவெல்லாம் புரிந்தவுடன், உடனே ஊருக்கு ரெயில் ஏறிவிட்டேன்,” என்று தான் கூட்டிற்கு திரும்பிய கதையை சொல்ல துவங்குகிறார் ஃபெலிக்ஸ்.

நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறீர்கள்…? என்ற கேள்விக்கு அவர் கூறும் பதிலில் உள்ள உண்மை, முகத்தில் அறைவது போல் இருக்கிறது. “நாம் ஓடுவது, உழைப்பது எல்லாம் உணவிற்காக தான். அதை நானே எனக்கு சொந்தமான 35 சென்டில் உற்பத்தி செய்து கொள்கிறேன்” என்கிறார். ஆம் அவர் தன் குடும்பத்துக்கான உணவை தன் 35 சென்டில் அவரே உற்பத்தி செய்து கொள்கிறார். எண்ணெய், ஆடை போன்ற பிற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் சந்தையை நம்பி இருக்கிறார்.


சரி… அதற்கான பணத்தேவைகளுக்கு என்ன செய்கிறீர்கள்..? கோழிகள், ஆடுகள் வளர்க்கிறேன், அதை சந்தையில் விற்று பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்கிறேன். 

நான். ஊருக்கு திரும்பி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இந்த மூன்று ஆண்டுகளில் எனக்கு எந்த உடல் நலக்கோளாறும் வந்ததில்லை. அதற்கு முக்கிய காரணம், மாநகர இரைச்சலில் இருந்து தப்பியது. மேலும், என் நிலத்தில் தினம் எட்டு மணி நேரங்களுக்கு மேல் உழைக்கிறேன். அதனால் மிக ஆரோக்கியமாக இருக்கிறேன். 

இவருடைய குழந்தை நாவினியை பள்ளிக்கு அனுப்பவில்லை. ‘Home Schooling’ முறையில் பயில்விக்கிறார். “நிச்சயம் இந்த நவீன பள்ளிகள், குழந்தைகளை நல்ல சமூக மனிதனாக மாற்றுவதில்லை. அதிகம் நுகரவே கற்று தருகின்றன. வீட்டில் நாவினி அவளுக்கு பிடித்ததை படிக்கிறாள். இயல்பாக அவளுக்கு நாட்டியத்தில் ஆர்வம் இருப்பதால், நாட்டியம் பயில்கிறார். முக்கியமாக, எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக சிந்திக்கிறாள்.” 

ஊருக்கு திரும்ப வேண்டும் என்று விருப்பப்பட்டால் மட்டும் போதாது. தம் தேவைகளை சுருக்கி கொள்ளாமல், தம் நிலைகளுக்கு திரும்புவது வீண். அது உங்களை இன்னும் அதிகமான மன அழுத்தத்தை தரும்.

இதையே வழிமொழிகிறார், தருமபுரி மாவட்டம் ராஜாபேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணி. மாதம் ஒரு இலட்சம் தந்த வேலைய உதறி, சொந்த ஊரில் நீர் நிலைகளை மீட்க போராடி வருபவர்.
“பணியில் இருந்த போது ஊரில் தளிர்கள் என்ற அமைப்பை துவங்கினோம். அது மூலமாக சூழலியல் தளத்தில் வேலை பார்த்தோம். நான் சென்னையில் இருந்ததால், என்னால் வார விடுமுறை நாட்களில் மட்டும் தான் அந்த பணியில் ஈடுபட முடிந்தது. எப்போது சனி, ஞாயிறு வருமென்று மனம் ஏங்கும்…? அதே நேரம் மாநகர வாழக்கையும் இயந்திரத் தனமாக இருந்தது. என்னையே அறியாமல் நான் சுயத்தை இழந்து கொண்டிருந்தேன். என்னை மீட்கவே, அதிக வருவாய் தந்த வேலையை உதறி சொந்த ஊருக்கு திரும்பினேன்,” என்கிறார் பாலசுப்பிரமணி. 

பணத்தேவைகளுக்கு இவரும் விவசாயமே செய்கிறார். “என் தேவைகளையும் குறைத்து கொண்டேன். நாம் அதிகம் நுகர்கிறோம் என்றால், அதிகம் இயற்கையை சுரண்டுகிறோமென்று அர்த்தம். நாம் தேவைக்கு அதிகமாக நுகர்ந்துவிட்டு, சூழல் மாசடைகின்றது என்று சொல்வது முரண்” என்கிறார். 

இவர்கள் மட்டுமல்ல… தம் வாழ்வை பணமாக மட்டும் பார்க்காமல் நூற்றுக்கணக்கனோர் தம் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.

இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் சொல்ல முயல்வது எதை….? எங்களையும் ஊருக்கு போக சொல்கிறீர்களா…? அவர்களுக்கு விவசாயம் தெரிந்தது, அதனால் சொந்த ஊரில் பிழைத்து கொண்டார்கள், ஆனால் எங்களுக்கு அதுவெல்லாம் தெரியாது…? எங்களால் எப்படி சொந்த ஊருக்கு திரும்ப முடியும்…? என்கிறீர்களா… நீங்கள் மீண்டுமொரு முறை கட்டுரையை படியுங்கள். அவர்கள் ஊருக்கு திரும்பியது மூலம் இன்னொரு விஷயத்தை சொல்ல வருகிறார்கள். அது நுகர்வை குறைப்பது. நம்மில் எத்தனை பேர் ஒன்றுக்கு மேற்பட்ட கைப்பேசிகளை வைத்திருக்கிறோம்…? ஒருவர் மட்டுமே பயணம் செய்ய காரை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்…? அதற்காக எவ்வளவு தேவையில்லமல் செலவு செய்கிறோம். இதையெல்லாம் தாண்டி இதனால் எவ்வளவு சூழலியல் கேடு. அறையிலிருந்து வெளியே செல்லும் போது மின்விசிறியை அணைக்காமல், அணுமின் நிலையங்கள் சூழலுக்கு கேடு என்று முகநூலில் ஸ்டேடஸ் போடுவது முரணானது. 

நாம் நுகர்வதை குறைத்து, இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தால் மட்டுமே. நம் குழந்தைகளுக்கு மாநகரங்கள் மிச்சம் இருக்கும். இவர்கள் அதை தான் சொல்கிறார்கள்.

– மு.நியாஸ் அகமது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.