குற்றம் கடிதல்- ஒரு வாசகனின் பார்வை!

Posted by

லக சினிமாவை உள்வாங்கி வெளிக்கொணராமல், நம் உள்ளூரில் நமக்கு பழக்கப்பட்ட பல நிகழ்வுகளை திரைக்கதையாக மாற்றிய இயக்குனர் பிரம்மாவுக்கு மிகப்பெரும் நன்றிகள். அதனோடு வாழ்த்துக்களும் கூட!!

நாம் எத்தனையோ படங்கள் பார்க்கிறோம். அத்தனையும் நம்மிடையே பாதிப்பை ஏற்படுத்திவிடாது. ஆனால் இந்த குற்றம் நிச்சயம் பலரை கடிந்திருக்கும். என்னையும் கடிந்தது. நமக்கு தெரிந்த நம்மூர் பள்ளிக்கூடங்களில், நிறைய தவறுகள் சரியாகவே செய்யப்படுகின்றன. குற்றங்களை குறைகளாக கூட காணாமல், நிறைகளாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை நம்மை சூழ்ந்து விட்ட இந்த காலக் கட்டத்தில், இப்படி ஒரு படைப்பை உருவாக்கிய இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள். 

எத்தனையோ அழுத்தங்களுக்கு நடுவே, உயிரை பணயம் வைத்த தீவிரவாதியாய் நம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர் என்பது வருந்தக் கூடிய உண்மை. இதை ஆமோதிக்க யாரும் முன்வராவிட்டாலும் இதுவே உண்மை. பாடப்புத்தகங்களை வாழ்க்கை புத்தகங்களாக மாற்றிய பெருமை நம் பள்ளிகளுக்கே சாரும். 

பள்ளிகளை பற்றி ஆராய்ந்தால் அது அகழ்வாராய்ச்சியை போல நீண்டு கொண்டே இருக்கும். நாம் கதைக்கு வருவோம். ஆம், குற்றம் கடிதல் எனும் மாபெரும் படைப்பை கொஞ்சம் சிலாகிப்போம். நல்ல கலையை ஆதரிப்போம். அதன் பெருமைகளை ஊரறிய செய்வோம். நம் படைப்பாளிகள் பெரும் அறிவாளிகள் என்பதை உலகெங்கும் உரக்க சொல்வோம். தொண்ணூறுகளில் மகாநதி, குணா, ஹேராம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படைப்புகளுக்கு நாம் செய்ய மறந்ததை இனி வரும் படைப்புகளுக்கு மறவாது செய்வோம். இதுபோன்ற படைப்புகள் நம் ஊரில், நம் நாட்டில் வர வேண்டும் என்ற பேராசையின் கனவாக பகிர்ந்து கொள்வோம்.

ஒரு சாதாரண சினிமா ரசிகனாக நான் கண்டது இந்த கதையில் வரும் நிஜங்கள். நடிப்பெனும் கலையை நாம் நம் வாழ்விலும் வளர்க்கிறோம். வருவாய் இல்லாமல், வருந்தாமல் தினமும் இந்த உலகமேடையில் நடித்துக் கொண்டே வாழ்கிறோம். இந்த கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் அப்படித்தான். அவர்கள் நடித்திருக்கிறார்கள் என்றால் அது எனக்கு ஆச்சர்யமே. இன்னுமொரு படத்தில் இப்படி ஒரு நடிப்பை அவர்களால் வெளிபடுத்த முடியுமா என்பது நிச்சயம் சந்தேகமே.
கம்யூனிஸ  கோட்பாடுகளை, கொழுந்து தீயைப் போல மிக அழகாக எரியவிட்டிருக்கிறார் இயக்குனர். திரைப்படம் முடியும் தருவாயில் வரும் தாய் புத்தகம் ஒரு சோறு பதம். தெருக் கூத்துகளின் மீது எனக்கொரு காதல் உண்டு. நேரலை ஒளிபரப்பு என்று இன்று நாம் சொல்கிறோம். நம் பாட்டன், முப்பாட்டன் காலம் தொட்டே, வீதியில் கூத்துக் கட்டும் கலைஞர்களின் அழகை ஆங்காங்கே அச்சு அசலாக பார்க்க முடிந்தது. 

உலகியல் வாழ்கையில், வீதி நாடகங்களின் மூலம் பெரும் மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதை இன்றும் தீவிரமாக நம்புகின்ற சாமானியர்களில் நானும் ஒருவன். ஒரு தாயின் வலியை, மௌனத்தை காட்டிலும் வேறு எதுவும் மேற்கோள் இட்டு காட்டிவிடாது என்பதை மிகவும் தன்மையாக காட்டியிருக்கிறார்கள். 

பெண் நிருபர் ஆட்டோவில் கேட்கும் கேள்விகளுக்கு தாயின் அலறலை மட்டுமே பதிலாய் காட்டியிருப்பது அற்புதம். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காட்சியை நான் இதுவரை கண்டதில்லை. படம் முழுக்க ஆசிரியை காட்டும் பரிதவிப்பு / ஏமாற்றம், தாய்மாமனாக வரும் அந்த கலைஞனின் துடிப்பு மற்றும் நடிப்பு என்று இந்த படம் காட்டும் எதார்த்தங்கள் ஒவ்வொன்றும் அக்னியின் சுத்தம்.
இந்த திரைப்படத்தை பற்றி எழுதினால், குறைந்தது ஒரு புத்தகம் போடும் அளவிற்கு எழுதலாம். அத்தனை புதுமைகள், அத்தனை கவிதைகள் ஒவ்வொரு காட்சியிலும். ‘ஆழம் அது ஆழம் இல்ல..’ என்ற ராஜா பாடலோடு படம் தொடங்குவதும், அதுவே மீண்டும் கடந்த கால நிகழ்வுகளை காட்டி முடித்து விட்டு நிகழ் காலத்திற்கு வரும்போது தொடர்வதும், அந்த ஒற்றுமை ஒரு வித அழகு. ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலை இன்னும் எத்தனை முறை பயன்படுத்தினாலும் அது நம்மை தாலாட்டிக் கொண்டே இருக்கும்.

ஒரு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்றால், அது குற்றம் கடிதல் போல் இருக்க வேண்டும். மெட்ராஸ், காக்கா முட்டை திரைப்படங்களுக்கு பிறகு என்னை மிகவும் பாதித்த நம்ம ஊர் கதை இதுதான். 

திரைக்கதை எழுதுவதற்கு நாம் உலக சினிமாக்களை பார்ப்பது ஒரு புறம் இருந்தாலும், இன்னும் நமது கிராமங்களிலும், நகரங்களிலும் அங்கே உள்ள தெருக்களிலும், அது கொண்ட மனிதர்களிடமும் ஓராயிரம் திரைக்கதைகள் மறைந்திருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. இயக்குனர் பிரம்மா தன் படைப்பின் மூலம் உணர்த்திவிட்டார். மிக அழகாக!! 

ஒரு தேசிய விருதோடு இதன் மதிப்பீடு ஏன் குறைந்து அளக்கப் பட்டது என்பது நிச்சயம் ஒரு நேர்மையான சினிமா ரசிகனின் ஆதங்கமே. 
 
இன்னும் பல விருதுகளுக்கு இது பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம்.

தமிழ் சினிமாவை நேசிக்கும் ரசிகர்களே, நீங்கள் நிச்சயம் இந்த காவியத்தை கண்டு களித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

– முத்துகுமார் மாணிக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.