மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் -11 (பஞ்சத்தால் உருவான பக்கிங்ஹாம் கால்வாய் )

Posted by

பஞ்சத்தால் உருவான  பக்கிங்ஹாம் கால்வாய்சுனாமி வந்த நேரத்தில் பக்கிங்ஹாம் கால்வாய் பற்றி பேச்சு  வந்தது. பல இடங்களில் சுனாமியின் தாக்கத்தை இந்த பகிங்காம் கால்வாய்தான் குறைத்தது  என்று பெருமைப்பட்டனர். பக்கிங்ஹாம் கால்வாய் என்பது செயற்கையாக உருவாக்கப்பட்டது. 1806 -ல் சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காடு வரை தோண்டப்பட்டு,   பின்னர் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிவரை இணைக்கப்பட்டது.

1886ம் ஆண்டில் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடிய பஞ்சத்தை எதிர்கொள்வதற்காக மக்களுக்கு வேலை கொடுத்து, கூலியும் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தின் பேரில் அந்தக் கால்வாயை மேலும் நீட்டிக்கத் திட்டமிட்டனர்.
எண்ணூரில் இருந்து அடையாறு வரை தோண்டப்பட்டது அந்தப் பஞ்சக் காலத்தில்தான். பின்னர் அது விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டு நீர்வழி வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. வெள்ளையர்கள் அவர்கள் வசதிக்காக உருவாக்கிய திட்டமே எனினும் ரயில் போக்குவரத்து, அஞ்சல் அலுவலகம் எல்லாம் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்துக்கு நிகரானது இந்தக் கால்வாய் திட்டம். வெள்ளையர்கள் இருந்தது வரை மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட இது, அவர்கள் நாட்டைவிட்டுச் சென்ற இருபது முப்பது ஆண்டு களில் வீணாகிப்போனது.

கடலை ஒட்டியே கடலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் அந்தக் கால்வாய் வெட்டப் பட்டது. கால்வாய்க்கு நீர்? கடலின் உவர் நீரே அந்தக் கால்வாயில் நிறைந்தது. அதனால் நீர் பஞ்சம் இல்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து விழுப்புரம் வரை வெட்டப்பட்ட இந்த 800 கிலோ மீட்டர் கால்வாய் அந்த நாளிலே படகுப் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்பட்டது. அரிசி, பருத்தி, மீன், கருவாடு எல்லாமே அந்தப் படகுகளில் பயணப்பட்டன.

சென்னையில் மூலக்கொத்தளம் என்ற இடத்தைப் பலரும் பார்த் திருப்பர். அங்கே கருவாட்டு மண்டி பிரபலம். ஆந்திர பகுதிகளில் இருந்து வரும் கருவாடுகள் மூலக்கொத்தளம் அருகே இருக்கும் படகுத்துறையில் வந்து இறங்கும். 1960-70 வரைகூட அங்கே கரு வாடு இறக்குவதற்கான படகுத்துறை நல்ல நிலையிலே இருந் தது. இப்போதும்கூட சிதிலமான நிலையிலே அங்கே படகுத் துறை இருப்பதைப் பார்க்க முடியும். 

மதராசப்பட்டணம் படத்தில் சென்ட்ரலுக்கு எதிரே காட்டப்படும் படகு சவாரிக்காட்சிகள் பக்கிங்ஹாம் கர்னாடிக் கால்வாய்தான். 

அந்தக் கால்வாய்க்கு மேலே ரயில்பாதையும் அதற்கு மேலே பேருந்து செல்லும் சாலையும் அமைக்கப்பட்டது. உலகிலேயே ஒரே இடத்தில் நீர்வழி, நிலவழி, ரயில்வழிப் பாதை அமைக்கப் பட்ட இடம் அதுதான் என்று அந்த நாளிலே ஒரு குறிப்பு வெளி யானது. 

ஒரு வேளை அது உண்மையாகவும் இருக்கலாம். நீர் வழிப்பாதைக்கான இந்தக் கால்வாய் மூலம், பின்னி மில்லுக்கு பருத்தி, தயாரான துணிகள் என சரக்குகள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கும். 

உப்பு நீர் பாதையாக இருந்த இந்தக் கால்வாய், பின்னர் சாக்கடைகளைக் கலக்கும் பாதையாகவும் மாறிப் போனது. கூவத்துக்கு ஏற்பட்ட அதே கதி. 800 கிலோ மீட்டர் கால்வாயின் குறுக்கே சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. சில இடங்களில் இயற்கையான சேதாரங்களால் கால்வாய் மூடப்பட்டுக் கிடக்கிறது. 

இந்தக் கால்வாயை மீண்டும் செப்பனிட வேண்டும் என நமது அமைச்சர்கள் ஆர்வம் காட்டுவார்கள். கைது நடவடிக்கை, ஊழல் குற்றச்சாட்டு போன்ற அவர்களின் பிரத்யேக பிரச்னைகளின் முன் இந்தக் கால்வாயின் மகத்துவம் அடிபட்டுப் போகும். 

கடந்த 2011-ல் சென்னையில் இருந்து முட்டுக்காடு வரை இந்தக் கால்வாயை முதல்கட்டமாக  சீர மைக்க முடிவு செய்தனர். அமைச்சர்கள், அதிகாரி கள் தீவிரமாகப் பார்வையிட்டனர்.  மீண்டும் கால் வாயில் போட்ட கல்லாக இருக்கி றது சீரமைக்கும் திட்டம். 

சுமார் 100 மீட்டர் வரை அகலப் படுத்தி, 10 மீட்டர் வரை ஆழப்படுத்தினால் அழகான நீர்வழிப்பாதை தயாராகும். சுற்றுலாத் தலமாகப் பயன் படுத்தலாம். ஆந்திரா முதல் மரக்காணம் வரை சரக்குகள் அனுப்பலாம்.

மாசடைவது குறையும். சுனாமி வந்தால் பாதிப்பு இருக்காது என எண்ணற்ற நன்மைகளைப் பட்டி யல் போட்டுக் காட்டிவிட்டார்கள். இருந் தாலும் இந்த 100 வருடக் கால்வாய் மரணப்படுக்கையில் கிடக்கிறது. இந்தப் பெரிய கால்வாயின் மீது கொஞ்சம் பெரிய மனசு வைக்க வேண்டும். 
– தமிழ்மகன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.