”மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்!’

Posted by

”மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை”- கண்களில் நீர் கசிய வைக்கும் ஹோட்டல்

துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார், விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன்,  அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார்.  சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார். அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன. அதனை பார்த்த அகிலேஷ்குமார், அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்.

அந்த சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள். சிறுவனிடம் என்ன வேண்டுமென்று அகிலேஷ் கேட்க, அவரது தட்டையே காட்டி கேட்டான் அந்த சிறுவன். உடனே அது போல மேலும் இரு பிளேட்டை  அகிலேஷ் ஆர்டர் செய்தார். உணவை பார்த்ததும் அந்த சிறுவன் அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கை வைக்கத் தொடங்கினான்.

அப்போது அந்த சிறுவனின் கையை மற்றொரு பிஞ்சு கை தடுத்ததது. தடுத்தது அவனது தங்கை. தனது தங்கை ஏன் தன்னைத் தடுக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் அந்த சிறுவன். பின்னர் இருவரும் வாஷ்பேசினுக்கு சென்று கை கழுவி விட்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து மிகவும் அமைதியாக  அமர்ந்து உணவை ருசித்து  சாப்பிட்டுள்ளனர். அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. ஏன் இருவரும் சிரித்துக் கொள்ளக் கூட வில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அந்த சிறுவன் அகிலேஷை பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான்.

பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அண்ணனும் தங்கையும் அமைதியாக ஹோட்டலை  விட்டு வெளியேறியுள்ளனர்.அதுவரை அகிலேஷ் அந்த சிறார்கள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, தனது உணவில் கையை வைக்கவில்லை.

பின்னர் அவரும் சாப்பிட்டு முடித்த முடித்து விட்டு, பில் கேட்டுள்ளார். பில்லும் வந்துள்ளது. அதனை பார்த்ததும் அகிலேஷின் கண்கள் குளமாகின. பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை. அதில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியம்  இதுதான்… ”மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்!’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.