சொலவடைகளும் பழமொழிகளும்-1

Posted by


சொலவடைகள், பழமொழிகள் என்று நாட்டுப்புறவியல் ஒரு வகைமை இருக்கிறது. பழமொழிகள் வேறு, சொலவடைகள் வேறு என்பதை முதலில் வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது பழமொழி சொற்செட்டுடன் செம்மையான மொழிநடையில் அவைகள் காணப்படும்.

‘வேலியில போகிற ஓணானை சீலயில நுழைஞ்சிக்கோன்னு சொல்லுவானேன். பிறகு அது குத்துது குடையுதுன்னு கத்துவானேன்’ என்பது சொலவடை. சொலவடைகள் பெரும்பாலும் வட்டார வழக்கு மொழிநடையில் அமைந்திருக்கும் கிராமிய வாழ்பவனுபத்தின் அடிப்படையாகக் கொண்டு பிறந்திருக்கும்.

பழமொழிகளுக்கான பொருள் அதை வாசித்தவுடன் ஓரளவிற்குப் புரிந்துவிடும் ஆனால் சொலவடைகளுக்கான பொருளை என்னைப் போன்ற கிராமத்தான் எவனாவது விளக்கிச் சொல்ல வேண்டும்.

பழமொழிகளுக்கான பொருளை அகராதியில் இருந்துகூட எடுத்துக்கொள்ளலாம் ஆனால் சொலவடைகளுக்கான பொருளை அதைச் சொன்னவனின் வாழ்வியலில் இருந்துதான் பெற முடியும்.

சொலவடைகள் எந்தச் சூழலில் எத்தகைய அனுபவத்தின்போது சொல்லப்படுகிறது என்பதை வைத்துத்தான் அதன் உண்மையான பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

சொலவடைகள் ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. வாழ்வின் இரத்தமும் சதையுமாக நம் முன் நிற்பவை.
பழமொழிகளைப் பொருத்த அளவில் அவைகள் கி.வா.ஜெகந்நாதன் காலம் தொட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பழமொழிகளை வாசிக்கிறார்கள். தனக்குத் தோன்றிய விதத்தில் எல்லாம் பொருள் புரிந்துகொள்கிறார்கள். பண்டிதர்கள் வேறு பழமொழிகளுக்கு அனர்த்தமாக பொருள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்- காட்சி ஊடகக்காரர் வேறு தன் பங்கிற்கு பழமொழிகளைக் குத்திக் குதறுகிறார்கள். பழமொழிகளின் உண்மையான பொருளை அனுபவம் சார்ந்து இதுவரை யாரும் எழுத்தில் முன் வைத்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

‘பழமொழி விளக்கம்‘, ‘பழமொழி நானூறு‘ என்று பழந்தமிழ் பாடல் நூல்கள் உள்ளன. இதுதவிர உரைநடையில் மொத்தமாக பழமொழிகளை முன்வைத்து யாராவது பேசியிருக்கிறார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை பழமொழிகளை மையமாகக் கொண்டு ஆய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன.

பழமொழிகளின் பாடே இப்படி என்றால் சொலவடைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சொலவடைகளை அசல் கிராமத்தான்கள் மட்டுமே உள்வாங்கிக்கொள்ள முடியும்!

உயிரோசையில் அடுத்த இதழில் இருந்து வெளிவர உள்ள ‘பழமொழிகளும் சொலவடைகளும் சொல்லும் வாழ்வியல்’ என்ற தலைப்பில் பழமொழிகள் படைக்கப்பட்ட சூழல். சொலவடைகள் உருவான காலம், இன்றைய எதார்த்த வாழ்வில் அவைகளுக்கான ‘இடம்’, அவற்றின் பின்புலத்தில் உள்ள கிராமத்து வாழ்க்கை அனுபவச் சுவடு, சுவாரஸ்யமான கதையாடல் என்று பல்வேறு விசயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன்.

உயிரோசையின் வாசகர்களை கிராமிய மணத்துடன், வட்டார வழக்கு மொழியுடன் கைகோர்த்துப் பேச ஆசைப்படுகிறேன். அடுத்த இதழ்வரை காத்திருங்கள். சந்திப்போம்!

அன்பன்
கழனியூரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.