சொலவடைகளும் பழமொழிகளும் 2

Posted by


  நாட்டுப்புறக்கதைகளைப் போலவே சொலவடைகளிலும் பல்வேறு  வகைமைகள் உள்ளன. நாட்டார் கதைகளில் சமூகம் சார் கதைகள், நகைச்சுவை கதைகள், புராணமரபுக்கதைகள், நீதிக்கதைகள், பாலியல் கதைகள், மிகை எதார்த்தக் கதைகள், குடும்பக் கதைகள், விலங்குகள், பறவைகள் சார் கதைகள், ராஜா ராணி கதைகள், என்று பலவகைக் கதைகள் இருப்பதைப் போலவே சொலவடைகளிலும் பழமொழிகளிலும் பலவகைகள் உள்ளன.

‘சொலவடைகளில் உள்ள சிக்கலே அவைகளை உளவாங்கிக் கொள்வதில்தான் உள்ளது’ என்று பேராசிரியர் தே.லூர்து சொல்கிறார். பழமொழிகள் பற்றிய அவரின் ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்தததாகும்.

ஒரு பிரதிக்கு பல விளக்கங்கள் என்பதை திருக்குறளில் நாம் பார்க்கிறோம். ஒரே குறளுக்கு உரையாசிரியர்கள் பலரும் தத்தமக்குத் தோன்றிய விளக்கங்களைத் தருகிறார்கள்.

இந்தக் கூற்று சொலவடைகளுக்கும் பொருந்தும். சொலவடைகளைக் கையில் எடுப்பவர்கள், அதை உண்டாக்கியவனின் அனுபவத்தை மறந்து விட்டு தத்தம் அனுபவங்களுடன் அவற்றைப் பொறுத்திப் பார்த்து விளக்கம் சொல்கிறார்கள்.
சொலவடைகளைச் சேகரித்து தொகுத்தால் மட்டும் போதாது. அவைகளுக்கு பெரியவர்கள் யாராவது விளக்கம் சொல்லவும் வேண்டும். நீதி இலக்கியங்களுககு உரையாசிரியர்கள் விளக்கமாக உரை எழுதுவதைப் போல.

இந்தத் தொடரில் பாமர மக்கள் உண்டாக்கி உலவ விட்டிருக்கிற சில சொலவடைகளுக்கு என் பாணியில் விளக்கம் முயல்கிறேன்
பொதுவாழ்வில் அக்கறை உள்ளவர்களாகச் சிலர் திகழ்வார்கள். அவர்களின்  மனம் இயல்பாகவே பொதுமக்களுக்கு தொண்டு செய்வதை நாடும். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் இத்தகையவர்கள் தானே வலியச் சென்று உதவிகள் செய்வார்கள் தான் செய்த உதவிக்கு எந்தப் பிரதி பலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். இத்தகைய குணநலம் உள்ளவர்கள் பல தியாகங்களைச் செய்ய வேண்டியது வரும். இவர்களுக்கு ஊரில் நற்பெயர் இருக்கும். புகழ் இருக்கும் நாலுபேர் அவரைக் கண்டதும் கை எடுத்துக் கும்பிடுவார்கள். பொதுதொண்டு செய்வதால் அவருக்கு ஆத்ம திருப்தி இருக்கும்.

இத்தகைய பொதுசேவை செய்யும் மனப்பான்மை, உலகில் வெகுசிலருக்கே இருக்கும். பெரும்பாலும் மக்கள் தன்வீடு, தன்பெண்டு, தன் பிள்ளைகளின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துவார்கள். சொத்து சுகம் சேர்ப்பது மேலும் மேலும் பணத்தைச் சேமிப்பது என்றே பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை அமைந்திருக்கும்.

சுயநலமாக, தன் குடும்ப முன்னேற்றத்திற்காக மட்டும் வாழும் மனிதர்களின் மனம் தேவையான அளவிற்கு பொன், பொருளைச் சேர்த்த பிறகு புகழை நாடும். ஆனால் அத்தகையவர்களுக்கு எளிதில் புகழ் கிடைக்காது.
பொது நலத்தொண்டு செய்து வாழ்கின்றவர்களுக்குத் தன் சொந்தக் குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்காது. பொது நலனில் அளவுக்கு அதிகமாக அக்கறை செலுத்துகின்றவர்கள். தன் சொந்தக் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாட்டார்கள், இத்தகையவர்களின் சொந்த வாழ்க்கை சோகமாகவேத் திகழும். இவர்களின் குடும்பத்தினரிடம் கேட்டால், ‘அவர் ஊருக்கு உழைத்து என்ன செய்ய? இங்கே, குடும்பம் வறுமையில் வாடுகிறதே’ என்று அங்கலாய்ப்பார்கள்.

சுயநலமாக வாழ்கின்றவனுக்கு புகழ் கிடைப்பதில்லை. பொதுநலமாக வாழ் கின்றவனுக்கு பணம் கிடைப்பதில்லை. இந்த இடைவெளி, மனிதர்களின் வாழ்வில் இருந்துகொண்டே இருக்கும்.

பொதுநலத்தில் அக்கறை கொண்டு, தன் சொந்தக் காரியங்களைக் கவனிக்காமல் வாழ்ந்தார் ஒருவர்.
அவரைப்பற்றி அந்த ஊரில் உள்ள பெரியவர் ஒருவரிடம் விசாரித்தபோது பெரியவர் சொன்னார். ‘அவரா, அவர் ஊருக்கு வண்ணப்பெட்டி. வூட்டுக்குப் பீத்தப்பெட்டியாச்சே!’ என்று பெரியவர் சொன்ன அந்தச் சொலவடை இரண்டுவிதமான பெட்டிகளைப் பற்றிப் பேசுகிறது. பெட்டி என்பது இங்கு பனை நாரினால் செய்யப்பட்ட நார்ப்பெட்டியைக் குறிக்கும். வண்ணப்பெட்டி, பீத்தப்பெட்டி என்று இரண்டுவிதமான பெட்டிகளைப் பற்றி இச்சொலவம் பேசுகிறது. இரண்டு விதமான, வாழ்வியல் பயன்பாடுகளைக் குறியீடாக, அச்சொற்கள் குறித்து நிற்கின்றன.

‘வண்ணப்பெட்டி என்பது அழகான வாழ்க்கை முறை; பீத்தப்பெட்டி (பிய்ந்துபோன பெட்டி) என்பது வறுமையான வாழ்க்கை முறை’ என்று பொருள் உணர்ந்து கொண்டு மீண்டும் அச்சொலவத்தை நினைவுகூர்ந்து பாருங்கள். சொலவம் சொல்ல வந்த பொருள் மிகச் சுலபமாகப் புரியும்.

‘ஊரில் உள்ள மக்களுக்கு எல்லாம் உதவிகள் செய்கிறவர்’ சொந்தவீட்டின் காரியங்களைப் பார்க்காமல் இருக்கிறார். இப்படிப்பட்ட மனிதர்களை எதார்த்த வாழ்வில் நாம் கண்கூடாகப் பார்க்கத்தான் செய்கிறோம். அது அவருடைய குணச்சித்திரம்.
இப்படி வாழ்கின்ற மனிதர்களுக்கு ஆறுதல் சொல்வது போன்று அமைந்துள்ளது. ‘ஊரா பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்’ என்ற பழமொழி.

வாசகர்களுக்கு இப்போது சொலவடைக்கும் பழமொழிக்கும் உள்ள வேறுபாடு புரியும் என்று நம்புகிறேன்.
நம் முன்னோர்கள், மூதாதையர்கள், மனிதர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்து, சிந்தித்து,  தன் அனுபவங்களின் விளைச்சலாகச் சொல்லி வைத்த இத்தகைய சொலவடைகள் நம்முன்னோர்கள் நமக்களித்த ‘முதுமொழிகள்’ என்றே கூறலாம்.
கிராமத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்து மறைந்த படிக்காத பெருமக்கள் இப்படிச் சொல்லிச் சென்ற சொலவடைகள், ரசிக்கத்தக்கதாகவும் இலக்கியத்தரம் மிக்கதாகவும் உள்ளன.

நீதி இலக்கியங்களைப் போன்று பழமொழிகளைப் போன்று கிராமத்து மக்களின், பாமரர்களின் நாவில் இன்றும் உலவும் சொவடைகள், சொல்லும் வாழ்வியலை தொடர்ந்து அடுத்த இதழிலும் கூறுகிறேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.